(என்.வீ.ஏ.)
பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (04) நடைபெற்ற இரண்டாவது ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கையை சகலதுறைகளிலும் விஞ்சும் வகையில் விளையாடிய இந்தியா 10 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இருதரப்பு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டி மீதமிருக்க இப்போதைக்கு 2 – 0 என்ற ஆட்டக் கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.
இந்திய வேகப்பந்துவீச்சாளர் ரேணுகா சிங்கின் ஆரம்ப பந்துவீச்சில் சரிந்த இலங்கை அதிலிருந்து மீள முடியாமல் தவித்தது.
அதுமட்டுமல்லாமல் 174 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு இந்தியா துடுப்பெடுத்தாடியபோது ஒரு விக்கெட்டைக்கூட இலங்கையினால் வீழ்த்த முடியாமல் போனது.
ரேணுகாவின் 4 விக்கெட் குவியலும் ஸ்ம்ரித்தி மந்தானா, ஷபாலி வர்மா ஆகியோரின் ஆட்டமிழக்காத அபார அரைச் சதங்களும் இந்தியாவின் வெற்றியை இலகுவாக்கின.
இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 174 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 25.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி குறிப்பிட்ட வெற்றி இலக்கை அடைந்து அமோக வெற்றியீட்டியது.
முதலாவது போட்டியில் சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டு 4 விக்கெட்களால் வெற்றிபெற்ற இந்தியா, அப் போட்டியில் ஏற்பட்ட தவறுகளை திருத்திக்கொண்டு இரண்டாவது போட்டியில் விளையாடி வெற்றி இலக்கை இலகுவாக அடைந்தது.
ஆரம்ப வீராங்கனைகளான ஸ்ம்ரித்தி மந்தானா 83 பந்துகளில் 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 94 ஓட்டங்களுடனும் இளம் வீராங்கனை ஷபாலி வர்மா 71 பந்துகளில் 4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 71 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
முன்னதாக இந்தியாவினால் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை, 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 173 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
முதலாவது போட்டியில் 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை இரண்டாவது போட்டியிலும் பிரகாசிக்கத் தவறியது.
ஒருவேளை, அணி பயிற்றுநர் ஹஷான் திலக்கரட்ன, துடுப்பாட்ட வரிசையில் குறிப்பாக ஆரம்ப ஜோடியில் மாற்றத்தை ஏற்படுத்தினால் இலங்கைக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இரண்டாவது போட்டியிலும் இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையாததுடன் அணித் தலைவி சமரி அத்தபத்து மீண்டும் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை. அவரால் 27 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.
நிலக்ஷி டி சில்வாவும் அமா காஞ்சனாவும் 7ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்திராவிட்டால் இலங்கை அணியின் நிலை இதைவிட மோசமாக இருந்திருக்கும்.
அமா காஞ்சனா மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
நிலக்ஷ டி சில்வா 32 ஓட்டங்களையும் அனுஷ்கா சஞ்சீவனி 25 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்திய பந்துவீச்சில் ரேணுகா சிங் ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 10 ஓவர்களில் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகி ஆனார்.
தீப்தி ஷர்மா 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மேக்னா சிங் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான 3ஆவதும் கடைசியுமான ஒருநாள் போட்டி வியாழக்கிழமை (07) பல்லேகலையில் நடைபெறவுள்ளது.