(எம்.எம்.சில்வெஸ்டர்)
போதுமான அளவு மசகு எண்ணெய் இல்லாமையினால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் எதிர்வரும் (23) வியாளக்கிழமை பின்னர் மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் நங்கூரமிட்டு காணப்படுகின்றது.
கப்பலில் உள்ள மசகு எண்ணெய்யை விடுவித்துக்கொள்வதற்கு தேவையான பணப் பற்றாக்குறை காரணமாகவே அக்கப்பல் குறித்த கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிக்கிறது.
90,000 மெட்ரிக் டொன் மசகு எண்ணெய்யை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதை அடுத்து, 70 நாட்களுக்குப் பின்னர் கடந்த மே (30) சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம், தனது பணிகளை முன்னெடுத்திருந்தது.
இதேவேளை , இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றபோதிலும், அதன் பணிகள் இன்னமும் 5 தினங்களுக்குள் முடிவடையும். அதற்கு முன்னதாக மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில், சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மூட வேண்டி ஏற்படும் என சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.