4 கோடியை கடந்துள்ள  வவுனியா நகர சபையின் ஆதன வருமான வரி இழப்பு 

Date:


பா.சதீஸ்

வவுனியா நகரசபையானது, தனது எல்லைக்குட்பட்ட பகுதியில் 4,12,45,333 ரூபா வருமானத்தினை தசாப்தமொன்றில் இழந்துள்ளது. 2009ஆம் ஆண்டு முதல் 2019ஆண்டு வரையான காலப்பகுதியில் மேற்படிதொகை அறவிடப்படவில்லை என்று கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 

இந்த நிலையில், குறித்த கணக்காய்வு அறிக்கை வெளியாகி தற்போது இரண்டரை ஆண்டுகள் முழுமையாக கடந்துள்ள நிலையில் இந்தத் தொகை மேலும் அதிகரித்துள்ளது. எனினும், அத்தொகை பற்றிய உத்தியோக பூர்வ தகவல்கள் எவற்றையும் பகிரங்கப்படுத்துவதற்கு வவுனியா நகரசபை தயாராக இல்லை. 

ஆதனவரி என்பது ஒருவருடைய அசையா சொத்துக்களின் வருடாந்த வாடகை பெறுமானத்திற்கு அந்தந்த உள்ளூராட்சி மன்றத்தினால் தீர்மானிக்கின்ற சதவீதத்தினை வரியாக அறவிடுவதாகும். 

1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க கட்டளைச்சட்டத்தின்படி ஆதனவரியினை செலுத்துவதற்கான தகமைகளாக நகரசபை அதிகார பிரதேசத்தில் உரித்தான காணியொன்றில் அல்லது கட்டிடமொன்றில் குடியிருப்பாளராக இருந்தால், நகரசபை எல்லைக்குள் அசையா சொத்துக்களின் உரிமையாளராக இருந்தால் , நகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள அரசாங்கத்திற்குரிய வீடொன்றில் கட்டிடமொன்றில், அல்லது காணியொன்றின் உரிமையாளராக இருந்தால், நகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள அசையா சொத்துக்களின் உரிமையாளராக இருந்தால் அவர்கள் ஆதனவரியினை கட்டாயமாக செலுத்த வேண்டும். 

ஒருவருடைய அசையா சொத்துக்களின் வருடாந்த பெறுமானத்தை மதிப்பீடு செய்வது மதிப்பீட்டு திணைக்களமாகும். மதிப்பீட்டு திணைக்களம் சொத்துக்களின் பெறுமானத்தை மதிப்பீடு செய்து நகரசபையிடம் கையளிக்கும்.  ஆனால் குறித்த ஆதனவரியை எத்தனை விகிதம் அறவிடுவது என்ற தீர்மானத்தை எடுப்பது நகரசபையாகும்.

அதாவது ஒருவரின் சொத்தின் வருடாந்த பெறுமானத்திற்கு எத்தனை விகிதம் வரியாக அறவிட வேண்டும் என்ற தீர்மானத்தை அந்தந்த உள்ளூராட்சி சபைகளே தீர்மானிக்கின்றன. அத்துடன், உரியவர்களிடத்திலிருந்து அவர்களிடம் இருந்து குறித்த வரியினை அறவிடுவதும் நகரசபையின் அதிகாரத்துக்கு உட்பட்ட கடமைகளில் ஒன்றாகும். 

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா நகரசபைக்குட்பட்ட பத்து வட்டார பகுதிக்கான ஆதனவரியினை நகரசபையினரே அறவிடுவதற்கு உரித்துடையவர்களாக உள்ளனர். 

குறித்த வரியை அறவிடுவதன் மூலம் கிடைக்கப்பெறும் நிதியினை நகரசபையினர் நகரப்பகுதியின் திண்மக்கழிவு அகற்றும் நடவடிக்கைகள், வடிகால் அமைத்தல், சுத்தம் செய்தல், வீதிகள் செப்பனிடல், சிறுவர் பூங்காக்களை அமைத்தல் போன்ற செயற்பாடுகளிற்கு பயன்படுத்துவது பொதுப்படையானது. 

இருப்பினும், வவுனியா நகரசபையினரால் அறவிடப்படும் ஆதனவரியானது 2009ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையில் 13ஆண்டுகளாக அறவிடப்படவில்லை. அதுமட்டுமன்றி, ஐந்து வருடத்திற்கு ஒருமுறை இடம்பெறும் ஆதன வரிக்கான மீள்மதிப்பீடும் நடைபெறவில்லை. இதனால் நகரசபையினருக்கு பல மில்லியன் கோடி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, 2017ஆம் ஆண்டு வெளிவந்த கணக்காய்வு அறிக்கையில் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக ஆதனவரி மீள்மதிப்பீடு செய்யப்படவில்லை எனவும், இதனாலேயே வீதவரி குறைவாக காணப்படுகின்றது என்பதும் கூறப்பட்டிருந்தது. இதற்கு அடுத்தபடியாக, 2019ஆம் ஆண்டு வெளிவந்த கணக்காய்வு அறிக்கையில், ‘வீதங்கள் மற்றும் ஆதன நிலுவைகளின் கூட்டு மொத்தமாகவுள்ள 4,12,45,333ரூபாவினை அறவிடுவதற்கு கடந்த 05 வருடங்களாக சபையினால் ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை’ என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அத்துடன் ‘கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக ஆதனவரி மீள்மதிப்பீடு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இதனால் ஆதனவரி வீதங்கள் மற்றும் அறவீடுகள், நிலுவைகளின் சரியான தன்மையினை திருப்திகரமாக ஏற்று உறுதிப்படுத்த முடியவில்லை’ என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மீள்மதிப்பீடு செய்யப்பட்டு ஆதன வரியினை அறவிடும்போதே ஆதனத்தொகை அதிகரிக்கும். மாறாக ஆதன வரி மீள்மதிப்பீடு செய்யப்படாமல், ஆதனவரி அறவிடப்படாமல் இருந்தால் நகரசபையினருக்கு வரவேண்டிய வருமானம் எவ்வாறு அதிகரிக்கும். மாறாக இழப்பீடே தொடரும்.

இவ்வாறான நிலையில், 2009ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டு வரை வருடத்திற்கு அதிகரிக்கப்பட்ட தொகை என்ன?, பெறப்பட்ட தொகை என்ன? என்று என தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழாக கட்டுரையாளரால் வினவியபோது, ‘2009 ஆம் ஆண்டு விலைமதிப்பீட்டு திணைக்களத்தினால் மதிப்பீடு செய்து வழங்கப்பட்ட வட்டார ரீதியான ஆவணப்பதிவேடானது தற்போதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் பின்னர் விலை மதிப்பீட்டு திணைக்களத்திற்கு மதிப்பீடு தொடர்பாக பல தடவைகள் அறிவித்திருந்தோம். அதற்கமைய 26.05.2022 அன்று வவுனியா விலைமதிப்பீட்டு திணைக்களத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அடுத்துவரும் ஒரு மாதத்திற்குள் இவ்வேலைகள் முன்னெடுக்கப்படும் என்று உறுதியளிப்பதோடு ஆதன மீள்மதிப்பீடு நடைபெறுவதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் தொடர்பாகவும் அறிவுறுத்தப்பட்டது.

அத்துடன், ‘மேற்படி செயற்பாடு விலைமதிப்பீட்டு திணைக்களத்தோடு இணைந்து மிக விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் இதுவரை காலப்பகுதியும் ஆதனத்தின் மதிப்பீட்டு தொகையில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை எனவும் பதிலளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பதிலளிப்பில் கவனிக்கப்பட வேண்டியதொரு விடயமுள்ளது. 2019ஆம் ஆண்டு வெளிவந்த கணக்காய்வு அறிக்கையில் ஆதனவரி அறவீடு தொடர்பாக ஐந்து வருடங்களாக ஆக்க பூர்வமான நடவடிக்கை இல்லை. எனவே வீதங்கள் மற்றும் ஆதனவரி நிலுவைகளை அறவிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் , மற்றும் மீள்மதிப்பீடும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கணக்காய்வு திணைக்களத்தினால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. எனினும், இரண்டரை ஆண்டுகளாக அந்த விடயம் பொருட்டாக கொள்ளப்பட்டிருக்கவில்லை.

பின்னர், குறித்த கணக்காய்வு அறிக்கையின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழாக 23.05.2022 ஆதனவரி தொடர்பான தகவல்களை பெறுவதற்காக விண்ணப்பம் கட்டுரையாளரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன் பிற்பாடு தான் நகரசபையினர் 26.05.2022 அன்று கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக பதிலளிப்பில் கூறியுள்ளனர். ஆனால் கடந்த இரண்டரை ஆண்டுகள் தாமதத்திற்கு எவ்விதமான விளக்கமளிப்புக்களும் செய்யப்படவில்லை. 

இவ்வாறிருக்க, இந்த தாமதம் பற்றி, நகரசபை கணக்கீட்டு உத்தியோகத்தர் அளித்துள்ள பதிலில், ‘கணக்காய்வு திணைக்களத்தினர் கூறிய பரிந்துரைக்கு வீதங்கள் மற்றும் ஆதனவரியை அறவிட நடுக்கட்டு உத்தியோகத்தரூடாக நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. விலை மதிப்பீட்டு திணைக்களத்துடன் பலமுறை தொடர்பு கொண்டும் உரிய ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டும் இற்றைவரை ஆதனங்கள் மீள் மதிப்பீடு செய்யப்படவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த பதிலானது, நேரடியாக நகரசபை கணக்கீட்டு உத்தியோகத்தர், மதிப்பீட்டு திணைக்களத்தினர் மீது ஒட்டுமொத்த வகைகூறும் பொறுப்பையும் ஒப்படைப்பதாகவே அமைகின்றது என்பது தெளிவாக உணர முடிகின்றது. ஆனால் நகரசபையின் பொறுப்புக்கூறல் பற்றி எவ்விதமான வெளிப்படுத்தல்களும் செய்யப்படவில்லை. 

இதேவேளை, 2019ஆம் ஆண்டு காணப்பட்ட அசையா சொத்துக்களின் பெறுமதி தற்காலத்தில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதற்கேற்ப மதிப்பீடு செய்து ஆதன வரியினை அறவிட்டிருந்தால் தற்போது வவுனியா நகரசபையினரின் ஆதனவரியில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமென தேசிய கணக்காய்வு திணைக்களத்தின் கணக்காய்வாய்ளர் தலைமை அதிபதியின் பாெழிப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

தற்போதும் கூட, ஆதனவரியை மீளப்பெறுவதற்கான துரித நடவடிக்கைகளுக்கு அப்பால் பொறுப்புக்கூறுவது யார் என்பதில் வவுனியா நகரசபையும், மதிப்பீட்டு திணைக்களமும் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை அடுக்கிய வண்ணமுள்ளன.Share post:

Popular

More like this
Related

Finland Joins Baltics, Poland In Shutting Border To Russian Tourists

The Russian operator of a pipeline that provides...

Newcastle confirm Garang Kuol transfer with Central Coast Mariners wonderkid to join in January

NEWCASTLE UNITED have accomplished the signing of Australian...

Mila Kunis takes the plunge as she shows off knockout pins at Luckiest Girl Alive premiere

Mila Kunis flashed her cleavage on the New...