ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் – ஹிருணிகா பிரேமச்சந்ர கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை

Date:


( எம்.எப்.எம்.பஸீர்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி, கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலுக்கு முன்பாக இன்று ( 6) காலை போராட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ஓராங்கமான ஐக்கிய  மகளிர் சக்தியின் தலைவி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர  பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட,  ஐக்கிய மக்கள் சக்தியின்  வெலிகம அமைப்பாளர்  ரொஷான் ஜயவிக்ரம உள்ளிட்ட மேலும் 11 பேரும்  இதன்போது கைது செய்யப்பட்டனர். 

எவ்வாறாயினும் கைது செய்யப்பட்ட ஹிருணிக்கா உள்ளிட்ட 12 பேரும் இன்று மாலை பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

போராட்டம் ஆரம்பம் :

 ஜனாதிபதி மாளிகைக்கு  செல்ல முடியுமான அனைத்து பாதைகளும் கடந்த 3 மாதங்களாக வீதித் தடைகள் அமைக்கப்பட்டு  நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மாளிகைக்கு  பொலிஸாரினதும், இராணுவத்தினரதும் ஒத்துழைப்புடன் மூன்றடுக்கு பாதுகாப்பு தொடர்ச்சியாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், இன்று (6) முற்பகல், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர   சில பெண்களுடன், நடமாட்ட கட்டுப்பாடுகளை எளிதில் சமாளித்து ஜனாதிபதி மாளிகை வரை சாதாரணமாக சென்று, அம்மாளிகைக்கு முன்பாக  போராட்டத்தை ஆரம்பித்தார்.

கோட்டை செத்தம் வீதியின் ஊடாக உள் நுழைந்த அவர்கள் அங்கிருந்து வைத்தியசாலை  ஒழுங்கை ஊடாக சென்று ஜனாதிபதி மாளிகையை அடைந்து போராட்டத்தை ஆரம்பித்தனர்.

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாக பதவி விலகுமாறு வலியுறுத்தி, அவர் பதவி விலகும் வரை அவ்விடத்தைவிட்டு அகலப் போவதில்லை எனக் கூறி ஹிருணிகா போராட்டத்தை ஆரம்பித்ததுடன் அதனை அவர் சமூக வலைத் தளம் ஊடாக  நேரலையாக ஒளிபரப்பி மக்களை அங்கு வருமாறு அழைத்தார்.

‘ நான் ஹிருணிக்கா வந்துள்ளேன்’ :

ஹிருணிக்கா பிரேமசந்ர உள்ளிட்ட சிறிய குழுவினர் ஜனாதிபதி  மாளிகைக்கு முன்பாக செல்லும் வரை அதனை அறிந்திராத பொலிஸாரும் இராணுவத்தினரும், அவர் மாளிகையின் பிரதான  வாயிலை அண்மிக்கும் போது ஹிருணிக்காவை அடையாளம் கண்டுகொண்டனர். ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் உடனடியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை இதன்போது மூடி பாதுகாப்பை பலப்படுத்தலாயினர்.

 ‘ நான் ஹிருணிக்கா வந்துள்ளேன்… உங்கள் தலைவனிடம் போய் கூறுங்கள்… அவரை முடிந்தால் வரச் சொல்லுங்கள்… அந்த முட்டாள் பதவியிலிருந்து செல்லும் வரை நான் இங்கிருந்து செல்ல மாட்டேன் என்பதையும் சொல்லுங்கள்… கோட்டா பயந்தாங் கோழி… ஒரு கள்வனை நீங்கள் பாதுகாத்துக்கொண்டிருக்கின்றீர்கள்…’ என கோஷம் எழுப்பியவாறு ஹிருணிக்கா பிரேமசந்ர ஜனாதிபதி மாளிளிகை முன்பாக போராட்டத்தை ஆரம்பித்தார்.

 ஊடகங்களுக்கு தடை :

 இந் நிலையில் ஹிருணிக்கா பிரேமசந்ர உள்ளிட்டவர்களின் போராட்ட நடவடிக்கைகளை அறிக்கையிட அப்பகுதிக்கு செல்ல முற்பட்ட ஊடகவியலாளர்களை பாதுகாப்பு தரப்பினர் தடுத்தனர். எவரையும் அப்பகுதி நோக்கி செல்ல விடாது வீதித் தடைகளில் கடமையில் இருந்த இராணுவத்தினரும், பொலிஸாரும் செயற்பட்டனர். இதனால் ஊடகவியலாளர்களுக்கும்  பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையில்  காரசாரமான கருத்து பரிமாற்றங்கள்  இடம்பெற்றன.

ஜனாதிபதி பாதுகாப்புபிரிவினரின் நடவடிக்கை :

இந் நிலையில் தொடர்ச்சியாக ஹிருணிக்கா பிரேமசந்ர உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக, நடை பாதையில் இருந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

 பஸ் வண்டி ஒன்றினை அவ்விடத்துக்கு அழைப்பித்து,    வெளிப்பகுதிகளுக்கு கைது நடவடிக்கைகள் தெரிவதை  மறைக்கும் வண்ணம் பஸ் வண்டியை நிறுத்தச் செய்த பொலிஸார், பின்னர் அங்கு போராட்டம் செய்த ஹிருணிக்கா உள்ளிட்ட 8 பெண்களையும் 4 ஆண்களையும்  இழுத்து பஸ் வண்டிக்குள் வீசினர்.

 கைது செய்ததாக அறிவிப்பு :

அதன் பின்னரேயே பொலிஸார், ஹிருணிக்கா உள்ளிட்டோரைக் கைது செய்ததாக அறிவித்தனர். ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் அவர்களைக் கைதுச் செய்து கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும்,  பாதுகாப்பு நிமித்தம் அவர்களை உடனடியாக துறைமுக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றதாகவும் பொலிஸார் கூறினர்.

 சஜித் விஜயம் :

இந்த நிலையில் துறைமுக பொலிஸ் நிலைய கூண்டில் ஹிருணிக்கா உள்ளிட்டோர் தடுத்து வைக்கப்ப்ட்டிருந்த நிலையில் அங்கு சென்ற எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கைது செய்யப்பட்டவர்களை சந்தித்தார்.

சாலை சட்டத்தை மீறியதாக குற்றச்சாட்டு :

இந் நிலையில் ஹிருணிக்கா உள்ளிட்டோரை எதற்காக கைது செய்தீர்கள் என கேசரி, பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவவிடம் வினவியது. அதர்கு பதிலளித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ, சாலைகள் சட்டத்தை அவர்கள் மீறியதால் அவர்களைக் கைது செய்து துறைமுக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றதாகவும், அக்குற்றச்சாட்டு பொலிஸ் பிணை வழங்க முடியுமான குற்றச்சாட்டு என்பதால்,  அறிவிக்கப்படும் திகதியின் நீதிமன்றில் ஆஜராகுமாறு நிபந்தனை விதித்து அவர்களை பொலிஸ் பிணையில் விடுவித்ததாகவும் அவர் கூறினார்.

இந் நிலையில் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த ஹிருணிகா பிரேமசந்ர  தமது கைது தொடர்பிலான தகவல்களை ஊடகங்களிடம் வெளிப்படுத்தினார்.

‘எனக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி.  நானும்  எனது குழுவினரும் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக சமூக வலைத் தள நேரலை ஒன்றினைச் செய்துகொண்டிருக்கும் போதே கைது செய்யப்பட்டோம். எம்மை கைது செய்ய கைது உத்தரவுகளோ அல்லது கைதுக்கான காரணமோ எமக்கு அறிவிக்கப்படவில்லை.   எம்மை அங்கிருந்து அகற்றுவதற்காகவே கைது செய்தனர். நாம் எந்த சட்டத்தையும் மீறவில்லை. என்னை சுமார் 10 ஆண்கள் தூக்கி பஸ் வண்டிக்குள் வீசினர். ஏனைய பெண்களையும் அப்படித் தான் செய்தனர்.  என்னை பொலிஸார் தாக்கவில்லை. எனினும் பொலிஸார் கைது செய்யப்பட்ட பல பெண்களை தாக்கினர்.  கூந்தலை பிடித்து இழுத்து கொடூரமாக நடந்துகொண்டனர்.  தகாத வார்த்தை பிரயோகங்களை முன்னெடுத்தனர்.

 எமது கையடக்கத் தொலைபேசிகளை பறித்துக்கொண்டனர். இதுவரை அவை எமக்கு மீள அளிக்கப்படவில்லை.

 ஒன்று மட்டும் நிச்சயம், கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 9 ஆம் திகதி கண்டிப்பாக வீட்டுக்கு செல்வார். அவரை அனுப்பும் போராட்டம் வெற்றி பெறும்.

 மற்றையது, நாம் எப்படி  அவ்வளவு பாதுகாப்பையும் மீறி ஜனாதிபதி மாளிகை வரைச் சென்றோம் என்பது தற்போது பெரும் பேசு பொருளாகியுள்ளது. அதனால் அப்பகுதியில் கடமையில் இருந்த  அப்பாவி பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரை பணி இடை நீக்கம் செய்ய முயற்சிப்படுவதாக அறிய முடிகிறது. இது அநியாயத்தின் உச்சம்

 உண்மையில் சாதாரணமாகவே நான் அங்கு சென்றேன்.  காற் சட்டை , ரீ சேர்ட் அணிந்து,  தொப்பியொன்றினையும் கண்ணாடியையும் அணிந்தவாறே நான் அங்கு சென்றேன்.

 நாம் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பே ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக முற்றுகை போராட்டம் நடத்துவது என முடிவு செய்தோம். நானும் எனது நண்பர்களும் அது தொடர்பில் கடந்த சில நாட்களாகவே, வாகனத்திலும் தனியாகவும் அப்பகுதிக்கு சென்று எவ்வாரு செல்லலாம் என்பது குறித்து ஆராய்ந்தே  அங்கு சென்றோம்.

கோட்டாபய பொருளாதார விடயத்தில் மட்டுமல்ல, பாதுகாப்பு விடயத்திலும் தோல்வியடைந்துள்ளார். நாம் அங்கு செல்லும் வரை கோட்டாவின் உளவுத் துறை அதனை அறிந்திருக்கவில்லை. ‘ என ஹிருணிகா பிரேமசந்ர குறிப்பிட்டார்.Share post:

Popular

More like this
Related

World News: Stay Updated with Global Headlines

In today's fast-paced world, staying updated with global headlines...

The Evolution of Entertainment: A Journey Through Time

The world of entertainment has undergone a transformative journey,...

Breaking News 2024: Navigating Through the Maze of Information

In today's rapidly evolving world, staying informed about the...

Embracing the Magic: A Journey into the World of Entertainment

Entertainment, in all its forms, has the remarkable ability...